மும்பை பகுதியின் தானே என்ற பிரதேசத்தில் பாபாவின் அடியவரான சோல்கர் என்பவர் வசித்துவந்தார். சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து அவர் , உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் நிர்வகிக்க கூடிய சூழலில் இருந்தார் .

தற்காலிக ஊழியராக இருக்கும் அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்று நிரந்தர ஊழியரானால் ,தனது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும் என நினைத்தார் . அவர் பாபாவிடம் ,” பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி சீரடி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு சீரடியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்! ” என்று வேண்டிக்கொண்டார் . பாபாவைப் பூரணமாக நம்பிய அவர் , தேர்வுக்கு தயாரானார் .பாபாவிடம் நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்து ,அதில் வெற்றியும் பெற்றார் .

தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப்பட்டது இல்லை . நடமாடும் தெய்வமான பாபாவை நம்பியவர்களை அவர் கைவிட்டதும் இல்லை . தேர்வில் சோல்கர் வெற்றிபெற்றார். அவரது பணியும் நிரந்தரமாக்கப்பட்டது. சோல்கர் தனது பிராத்தனையை நிறைவேற்ற முடிவு செய்தார் . ஆனால் அதற்கு பணம் தேவைப்பட்டது . அதற்கு தனது அன்றாட செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, இனிமேல் அவர் தனது தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத்தார்.

அதனால் செலவு மட்டுப்பட்டு சீக்கிரமே அவரால் சீரடி பயணத்திற்கான பணத்தை சேகரிக்க முடிந்தது. தான் சேமித்த பணத்தின் மூலம் சீரடி வந்த அவர், பாபாவைப் பார்த்ததும் மெய்மறந்தபடி நின்றார் . மக்களின் துயர் துடைக்க ,மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பரவசம் அவரைத் தொற்றிக் கொள்ள பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்தார் .

ஆனால் எதுவும் பேசவில்லை. பின் சோல்கர் , பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் . இதை பார்த்துக் கொண்டிருந்த பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை தன்னருகே அழைத்தார். “அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள் “என்றார் . அங்கிருந்த அடியவர்களுக்கு பாபா எதைப் பற்றி சொல்கிறார் என்று புரியவில்லை.

ஆனால், சோல்கருக்கு அதன் அர்த்தம் புரிந்தது. தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். மனம் நெகிழ்ந்து ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை தனது தாமரை மலர் போன்ற கரங்களால் தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்து , ” இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற்காக இனிப்பை தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? “என்றார் .

தனது அடியவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அந்த தெய்வம் தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ? தன்னை மனத்தால் ஸ்மரிப்பவர்கள், எத்தனை தொலைவில் இருந்தாலும் தனது பார்வையும் , கருணையும் அவர்கள் மேல் எப்போதும் இருக்கும் என்பதை அந்த சீரடிவாசன் தனது பக்தர்களின் வாயிலாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் .

தனது அடியவர்கள் மீது கருணை மழை பொழியும் சாயி நாதனின் சரிதம் தொடரும்…

ஓம் சாயி ராம்