‘வலிமை’திரைப்பட படப்பிடிப்பு தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்களும் வலிமை படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்று கேட்டு வந்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் சூட்டிங் நாளை மீண்டும் தொடங்கவுள்ளது. ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொள்ளவுள்ளார். படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வலிமை பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.