விஜயின் ‘மாஸ்டர்’ 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுவே விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்க, கூடுதல் மகிழ்வாக விஜயின் 65 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அப்படத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டும் அமைந்தது. அப்படி ஒரு மகிழ்ச்சியில் இருந்த விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் வருத்தமடையும் விதத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் உலா வருகிறது.

இதுவும் விஜய் 65 படத்துடன் சம்மந்தப்பட்ட விவகாரம் தான். விஜயின் 65 வது படத்தை முதலில் இயக்குவதாக இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது நாடறிந்த செய்தி. ஆனால், தற்போது அவர் விஜயின் 65 வது படத்தை இயக்கவில்லை என்பதும் நாடறிந்த செய்தி தான்.

ஆனால், இதுவரை யாரும் அறியாத செய்தி என்னவென்றால், விஜய் படத்தில் இருந்து விலகிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அதன் பிறகு என்ன செய்யலாம், எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கலாம், என்று பல நாட்கள் யோசித்து இறுதியில், கிராபிக்ஸ் படம் ஒன்றை இயக்க முடிவு செய்ததோடு, அந்த படத்தில் குரங்கு ஒன்றை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தாராம். மேலும், அதற்கான வேலைகளை உடனடியாக தொடங்கியவர், கிராபிக்ஸ் பணிகளை திறம்பட செய்யும் நிறுவனம் ஒன்றை அனுகி, ஒப்பந்தம் போட்டு அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டாராம்.

விஜயை வைத்து மூன்று படங்கள் இயக்கிய முருகதாஸ், தமிழ் சினிமாவை தாண்டி இந்தி சினிமாவிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருந்தாலும், விஜயின் 65 வது படத்தில் அவர் நீக்கப்பட்டது, அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே அவர், எந்த ஹீரோவிடமும் கால்ஷீட் கேட்காமல், ஒரு குரங்கை ஹீரோவாக வைத்து தன்னை நிரூபிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்று இந்தியாவே கொண்டாடும் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலியும் இதுபோன்ற நிலையை சந்தித்துள்ளார். தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்த, அவருக்கு இளம் ஹீரோ ஒருவர் கால்ஷீட் கொடுக்காததால், “என்னால் ஒரு ஈ யை கூட ஹீரோவாக்க முடியும்” என்று சொல்லி, ‘நான் ஈ’ படத்தை எடுத்து வெற்றிப் பெற்று காட்டினார். தற்போது அவரது பாணியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் குரங்கு ஒன்றை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தயாராகிவிட்டாராம்.

விஜயின் 65 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன், தனது படத்தின் அறிவிப்பையும் வெளியிட வேண்டும், என்று முருகதாஸ் முடிவு செய்தாராம். அதன்படி விஜய் 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாக, முருகதாஸ் தனது குரங்கு படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார், என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இந்த நடவடிக்கை விஜயை வெறுப்பேற்றும் விதமாக இருப்பதாக, கோலிவுட்டில் முனுமுனுக்கப்படுகிறது.