தல அஜித் இயக்குனர் வினோத் கூட்டணியில் வலிமையாக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். இவர்களது கூட்டணியில் இதற்கு முன் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் வலிமை படத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தையும் போனிகபூர்தான் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகரான கார்த்திகேயா நடிக்கிறார். அஜித் மற்றும் கார்த்திகேயா இடையேயான சண்டை காட்சிகளுக்கு கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாமே சிறப்பாக வந்துள்ளதாம். பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் இதற்குமுன் தமிழில் காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருக்கிறார்.

வலிமை படத்தை பொறுத்தவரை, இந்த படம் துவங்கும் போதே இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என கூறப்பட்டது. அந்த வகையில் பல அதிரடியான ரிஸ்கான சண்டை காட்சிகள் இருக்கிறதாம் இந்த படத்தில். முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அங்கு மிகவும் ரிஸ்கான ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டை காட்சிக்காக திட்டமிடும் போதே இயக்குனர் வினோத் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டரான திலிப் சுப்பராயன், சில காட்சிகளுக்கு டூப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன்படி அந்த காட்சி எடுக்கப்படும் போது இயக்குனர் வினோத் அதை அஜித்திடம் கூற அஜித் அதற்கு மறுத்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டரும், இயக்குனரும் எவ்வளவோ கூறியும் அஜித் கேட்பதாக இல்லை, ஒரே ஒரு பதில் மட்டும் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதன்படி ‘இவ்வளவு விபத்துகளுக்கு பிறகும் நான் நல்லா இருக்கேன்னா, என் சின்ன வயசுல நான் விளையாடிய ஸ்போர்ட்ஸ்தான் காரணம். டோண்ட் ஒரி, நீங்க மனசுல நெனச்சிருக்குற மாதிரியே இந்த காட்சியை எடுங்க, நானே செய்றேன்‘ என அதிரடியாக கூறி விட்டாராம். கூறியது மட்டுமல்லாமல் அந்த ரிஸ்கான சண்டை காட்சிகளில் அதிரடியாக தானே நடித்து மிரட்டியிருக்கிறார் தல. அந்த சண்டை காட்சியும் சிறப்பாக வந்துள்ளது.

இதே போலவே சென்னையில் எடுக்கப்பட்ட பைக் சேசிங் காட்சியிலும், ஒரே ஒரு காட்சி மிகவும் ரிஸ்கானதாம். அதற்கும் இயக்குனரும், ஸ்டண்ட் மாஸ்டரும் அஜித்திடம் டூப் போட பேச, ‘இல்ல இதை நானே செய்கிறேன்’ என பழைய பதிலையே கொடுத்துள்ளார் அஜித். அந்த வகையில் இந்த வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே இந்திய அளவில் பேசப்படும் அளவிற்கு இருக்குமாம்.