ஓஹோ இது தான் விஷயமா ! அஜித் அறிக்கையின் பின்னால் இருக்கும் முக்கிய நபர் யார் தெரியுமா ?

சென்னை: சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. அஜித் தரப்பிலிருந்து திடீரென இப்படி அறிக்கை வெளியாக நிறைய காரணங்கள் இருக்கிறது.

பொதுவாக நடிகர் அஜித், சினிமா தவிர்த்து பொது வாழ்க்கையில் ஈடுபட விரும்பாதவர். சினிமா – குடும்பம் – தனது தனிப்பட்ட விருப்பங்கள் என்று வாழ கூடியவர். சினிமா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் போட்டோகிராபி, டிரோன் பயிற்சி, பைக் ரேஸ் என்று தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சினிமா விழாக்கள், இசை வெளியீடு என்று எதிலும் இவர் கலந்து கொள்வது இல்லை. அதோடு இன்னொரு பக்கம் அரசியல் பக்கமும் சென்றது இல்லை, பொது பிரச்சனைகள் குறித்தும் இவர் பேசியது இல்லை.

அதோடு அஜித் பெரிதாக ரசிகர்கள் உடன் தொடர்பு கொள்ளும் வகையில் அறிக்கை விட்டது இல்லை. கடைசியாக 2011ல் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். அதன்பின் கடந்த வருடம் பாஜகவில் நான் இணையவில்லை என்று அஜித் குறிப்பிட்டு இருந்தார். என்னுடைய ரசிகர் அரசியலில் ஈடுபட விரும்பினால் தனிப்பட்ட முறையில் ஈடுபடலாம். ஆனால் என் சார்பாக யாரும் அரசியல் செய்யகூடாது, என்னுடைய புகைப்படங்களை அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்த கூடாது என்று அஜித் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் தற்போது அஜித் தரப்பு இன்னொரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும் இது. சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் அஜித் குமார் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ அஜித் குமார் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்து உள்ளது. இதை முன்னிட்டு இந்த சட்டஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் குமாருடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகார பூர்வமாக அஜித் குமார் அறிவிக்கிறார். மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுக்கோள் விடுக்கிறார்.

இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு அஜித் குமார் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவப்பதோடு, பொது மக்களும், இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறார், என்று அஜித் குமார் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் சட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு பின் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டம் தெரிவிக்கிறது. அதன்படி அஜித் குமாரின் பிரநிதிதி என்று கூறி சிலர் கோலிவுட்டில் மோசடி செய்ய முயன்று வருகிறார்கள். கோலிவுட்டில் இருப்பவர்களை ஏமாற்றும் வகையில் மோசடி கும்பல் செயல்படுவதாக அஜித்திற்கு தகவல் சென்றுள்ளது. இதுவரை மோசடி எதுவும் நடக்காத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஜித் இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.

அஜித், பொது விஷயங்களில் தனது நம்பிக்கைக்கு உரிய சுரேஷ் சந்திராவை தவிர வேறு யாரையும் நம்பியது இல்லை. இதனால் அவர் மட்டுமே தனது பிரதிநிதி என்று அஜித் அறிவித்துள்ளார். தன் பெயரை சொல்லிக்கொண்டு யாரும், யாரையும் மோசடி செய்து விட கூடாது என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்கள் என்று கூறி சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் மீது நடிகர் அஜித்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவர் பெயரை கூறிக்கொண்டு சிலர் அரசியல் கட்சிகளை அணுகுவதாகவும் தகவல்கள் கடந்த சில வாரமாக வெளியாகி வந்தது. இதை எல்லை எல்லாம் தடுக்கும் வகையிலும், மொத்தமாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதுதான் அஜித்தின் இந்த திடீர் அறிக்கைக்கு காரணம் என்கிறார்கள்.