ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டன. அதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் 45% சதவிகித படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளை இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் படக்குழு வெளிநாடு சென்று ஷூட்டிங் நடத்தும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருக்கும் சண்டைக் கலைஞர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதால் இந்தியாவில் அதை படமாக்க முடியாது என்றும் படக்குழு தம்மிடம் தெரிவித்ததாக தனது யூடியூப் சேனலில் நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

‘வலிமை’ திரைப்படம் குறித்து வெளியாகியிருக்கும் இத்தகவலை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.